செய்திகள்
கொள்ளை

வடபழனியில் போலீஸ் போல் நடித்து முதியவரிடம் நகை கொள்ளை

Published On 2019-08-16 11:25 GMT   |   Update On 2019-08-16 11:25 GMT
வடபழனியில் போலீஸ் போல் நடித்து முதியவரிடம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

குரோம்பேட்டை, லட்சுமிபுரம், கணபதிநகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது71). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.

இவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக மாநகர பஸ் மூலம் வடபழனிக்கு வந்து கொண்டு இருந்தார்.

பஸ்சில் பயணம் செய்த போது டிப்-டாப் வாலிபர் ஒருவர் லட்சுமணன் அருகே அமர்ந்து பேச்சு கொடுத்தார். வடபழனி பஸ் நிறுத்தம் வந்ததும் லட்சுமணன் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

அப்போது அதே வாலிபர் பின்தொடர்ந்து வந்து லட்சுமணனிடம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். ‘நான் போலீஸ், நீங்கள் கஞ்சா வைத்து இருப்பதாக சந்தேகம் உள்ளது. சோதனை செய்ய வேண்டும். உங்களது மோதிரங்களை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து லட்சுமணன் 3 பவுன் கொண்ட இரண்டு மோதிரங்களை கழற்றி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். பின்னர் சோதனை செய்த அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அப்போது பேண்ட் பாக் கெட்டில் இருந்த மோதிரங்கள் மாயமாகி இருப்பதை கண்டு லட்சுமணன் அதிர்ச்சி அடைந்தார். போலீஸ் போல் நடித்த அந்த வாலிபர் மோதிரங்களை ‘அபேஸ்’ செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து லட்சுமணன் வடபழனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News