செய்திகள்
வணிக வரி அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வணிக வரி அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள்- முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2019-08-16 09:59 GMT   |   Update On 2019-08-16 09:59 GMT
பல்வேறு பகுதிகளிலுள்ள 9 வணிகவரித்துறை அலுவலகங்களில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சி.சி. டி.வி. கேமராக்களின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:

திருக்கோவிலூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் என மொத்தம் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை முற்றிலும் கணினிமயமாக்கும் ஸ்டார் 2.0 மென்பொருள் 12.8.2018 அன்று முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம், கிராமப் பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் கணினி மூலமாகவே வருவாய்த் துறைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது இந்த வசதியை நகர்ப்புற பகுதிகளுக்கும், விரிவுபடுத்தும் நோக்கில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நகர்ப்புறப் பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் ஸ்டார் 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதன்மூலம், நகர்ப்புற பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு கணினி மூலமாகவே அனுப்பப்படுவதால் காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன், பட்டா மாறுதல் பணியும் விரைவில் நடைபெறும்.

வணிகவரி அலுவலகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், இவ்வலுவலகங்களின் பாதுகாப்பு கருதியும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 9 வணிகவரித்துறை அலுவலகங்களில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சி.சி. டி.வி. கேமராக்களின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் 54 ஹெக்டேர் பரப்பளவிலான புதை உயிரிப்படிவங்களைக் கொண்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் 1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நுழைவுச் சீட்டு விற்பனைக்கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அருங்காட்சியக வெளியீடுகள் விற்குமிடம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள காணொளி விளக்கக் கூடம்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ், திருவண்ணாமலை வட்டம், சமுத்திரம் கிராமத்தில் 424.44 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கருங்கல்லிலான சுற்றுச்சுவர், மாணவர்களுக்கான தங்கும் விடுதிக் கட்டடம், இரண்டு தொழிற் பயிற்சிக் கூடங்கள் என மொத்தம் 6 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம், அருங்காட்சியகங்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு 314 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள இசைப் பள்ளி கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News