செய்திகள்
சண்முகவேல்-செந்தாமரை

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயல் விருது

Published On 2019-08-14 06:36 GMT   |   Update On 2019-08-14 06:36 GMT
நெல்லை மாவட்டம் கல்யாணிபுரத்தில் கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி விரட்டி அடித்த தம்பதிக்கு வீரதீர செயல் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவருடைய மனைவி செந்தாமரை. இவர்களது 2 மகன்கள் வெளியூரிலும், மகள் வெளிநாட்டிலும் வசித்து வருகின்றனர். இதனால் சண்முகவேல் தனது மனைவியுடன் கல்யாணிபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் தங்களது பண்ணை வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்கு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அரிவாளுடன் வந்தனர். கொள்ளையர்களில் ஒருவன் பின்பக்கமாக வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து அவரை நிலைகுலைய செய்தார்.

இதனை பார்த்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை விவேகத்துடன் செயல்பட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையன் மீது வீசினார். இதையடுத்து சண்முகவேல் கொள்ளையன் பிடியில் இருந்து விடுபட்டார். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கொள்ளையர்களுடன் போராடினர்.

கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கியும், அவர்களை கணவன்- மனைவி இருவரும் தைரியமாக எதிர்கொண்டு சண்டையிட்டனர். கொள்ளையர்களின் தாக்குதலுக்கு வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் மீது வீசிஎறிந்து தாக்கினார்கள். அவர்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.


சண்முகவேல் மற்றும் அவரது மனைவி கொள்ளையர்களை தாக்கி விரட்டியடித்தது அவர்களது வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியர் கொள்ளையர்களை விரட்டியடித்த காட்சியை கண்டு வியப்படைந்தனர்.

மேலும் அவர்களது தைரியமான செயலை பலரும் பாராட்டினர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரும் வயதான தம்பதியருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் நேற்று தம்பதியரின் வீட்டிற்கு நேரடியாக சென்றார்.

அப்போது கொள்ளையர்களை விரட்டியடித்த விதம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அதனை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தம்பதியரை வெகுவாக பாராட்டினார்.

இந்தநிலையில் கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகிய இருவருக்கும் வீரதீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.

அதன்பேரில் கடையம் தம்பதிக்கு நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படலாம் என தெரிகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய இருவரும் அம்பை தாசில்தார் வெங்கடேசுடன் இன்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் தலைமை செயலகத்தில், தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News