செய்திகள்
பெண் கைது

2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சிலை கடத்தல் பெண் கைது -சிக்கியது எப்படி?

Published On 2019-08-13 06:00 GMT   |   Update On 2019-08-13 06:00 GMT
சிலை கடத்தல் வழக்கில்,2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண், சிலை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:

சிலை கடத்தல் வழக்கில், சென்னை தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில் பச்சைநிற கருங்கல்லால் ஆன 2 பழங்கால சிவலிங்கங்கள் இருந்தன.

இந்த சிலைகள் வேலூர் மாவட்டம், மேல்பாடிகோவிலில் இருந்து திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சிலைகளை தீனதயாளனுக்கு புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக் கூடம் நடத்தி வரும் தொழிலதிபர் புஷ்பராஜன் என்பவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் புஷ்பராஜனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்ததில் மேல்பாடி கோவிலில் இருந்து 16 பழங்கால சிலைகள் திருடியதாகவும், 2 சிலைகளை தீனதயாளனிடம் கொடுத்து விட்டு, மீதி 14 சிலைகள் புதுச்சேரியில் மரிய தெரசா என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அங்கு சோதனை செய்தனர். இதில் 11 சிலைகள் சிக்கின. மீதமுள்ள 3 சிலைகளுடன் மரிய தெரசா தலைமறைவானார். பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அவர், மீண்டும் பிரான்சுக்கு சென்றதாக கூறப்பட்டது.

தப்பியோடியவர் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அவரை பிடிக்க லுக் அவுட் போஸ்டர் பிறப்பிக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக எந்த பலனும் இல்லை. வெளியூரில் இருந்து மீண்டும் தெரசா இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் தானே, இப்போது புதுப்பித்திருக்க மாட்டார்கள் என நினைத்துள்ளார். இந்த அசட்டு தைரியத்துடன் சென்னைக்கு திரும்ப வந்த தெரசா குடியுரிமை அதிகாரியிடம் சிக்கினார். இதனையடுத்து சிலைக்கடத்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News