செய்திகள்
கொள்ளை

இரணியல் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் 4-வது முறையாக உண்டியல் கொள்ளை

Published On 2019-08-12 12:06 GMT   |   Update On 2019-08-12 12:06 GMT
இரணியல் அருகே உள்ள ஆலங்கோட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் 4-வது முறையாக உண்டியல் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டார்.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள ஆலங்கோட்டில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இதில் ஞாயிறு தோறும் விசே‌ஷ ஆராதனைகள் நடைபெறும். வழக்கம்போல் நேற்று காலை ஆராதனை செய்வதற்காக ஆலயத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி சபை செயலாளர் எபனேசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த ஆலயத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது ஆலயத்தில் ஜன்னல் வழியாக ஒரு வாலிபர் உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவர் உண்டியலை உடைத்து திருடி விட்டு செல்லும் காட்சியும் கேமிராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த கொள்ளையனை தேடி வருகிறார்கள். ஏற்கனவே 3 முறை இந்த ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் 4-வது முறையாக கொள்ளையன் அந்த ஆலயத்தில் கைவரிசை காட்டியுள்ளார்.

கேமிராவில் பதிவான வாலிபரின் பெயர் மற்றும் விவரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இதேபோல் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (வயது 50). இவர் நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைந்து பொருட்களும் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. கைரே கைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News