செய்திகள்
அன்பரசு

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம்

Published On 2019-08-09 04:54 GMT   |   Update On 2019-08-09 04:54 GMT
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் வசித்து வந்தவர் அன்பரசு (வயது 78). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

நேற்று மதியம் அன்பரசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையில் அன்பரசு உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அன்பரசு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு காட்டுப்பாக்கத்தில் உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த அன்பரசு உடலுக்கு முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி.விஷ்ணுபிரசாத் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அன்பரசுவின் மனைவி கமலா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். அதில் மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார். இளைய மகன் அருள் அன்பரசு முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். மகள் சுமதி, திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

செக் மோசடி வழக்கில் அன்பரசு மற்றும் அவருடைய மனைவி கமலா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 2 ஆண்டு தண்டனையை கடந்த மாதம் ஐகோர்ட்டு உறுதி செய்தது.

அன்பரசு மறைவைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

Tags:    

Similar News