செய்திகள்
கனமழை காரணமாக மாயாறு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

ஊட்டியில் 4வது நாளாக கனமழை - மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-08-07 05:14 GMT   |   Update On 2019-08-07 05:14 GMT
ஊட்டியில் 4வது நாளாக கனமழை பெய்து வருகிறது. ஊட்டி-மைசூரு சாலையில் சாண்டி நல்லா பகுதியில் நேற்று இரவு மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி - மைசூரு சாலையில் சாண்டி நல்லா பகுதியில் நேற்று இரவு மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். பலத்த மழை காரணமாக ஊட்டி மஞ்சனக் கொரை பள்ளி தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. கூடலூர் உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் விழுந்தது. அவைகள் உடனுக்குடன அப்புறப்படுத்தப்பட்டது.

கோத்தகிரி அருகே குஞ்சப்பணையில் சின்டெக்ஸ் லோடு ஏற்றி வந்த வாகனம் மீது மரம் விழுந்ததால் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்தது.

கூடலூரை அடுத்துள்ள மங்குழி வழியாக ஓடும் பாண்டியாற்றின் கிளை நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் இங்குள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ள பழமையான பாலத்தின் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப் பகுதியில் உள்ள காலம்புழா ஆற்றின் கரையோரத்தில் உள்ள விநாயகர் கோவிலின் சுற்று சுவர் இடிந்தது. இங்குள்ள ஓடையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல அமைக்கப்பட்ட சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் சாலையின் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதம் அடைந்தது. கூடலூரை அடுத்துள்ள காசிம் வயல் பகுதியில் குஞ்சு முகமது என்பவரது வீட்டை ஒட்டிய தடுப்பு சுவர் மழையால் சேதம் அடைந்தது.

கனமழை காரணமாக ஊட்டி-கூடலூர் சாலையில் தவளை மலை, ஊசி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

பந்தலூர் சேரம்பாடி போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி சீதா வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

செறுமுள்ளியில், புறமண் வயல், காசிம் வயல், புளியாம்பாறை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தது. பைக்காராவில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அதன் டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தலை குந்தா சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பைக்காரா, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட 12 அணைகள் உள்ளது. இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பார்சன் வேலி அணையில் இருந்து ஊட்டிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மின்சார கம்பி மீது மரம் விழுந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊட்டிக்கு குடிநீர் சப்ளை 2 நாட்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊட்டி படகு இல்லத்திலும் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று 4-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தாலுகாக்களில் 3-வது நாளாக தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதுமலை புலிகள் காப்பகம் மாயாற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. புலிகள் காப்பகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். டவர் அருகே மாயாறு நீர் வீழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போகும் அளவுக்கு அப்பகுதியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

ஊட்டி -50, நடுவட்டம்-119, கல்லட்டி- 18,கிளன் மார்கன்-101, குந்தா-46, அவலாஞ்சி-405, எமரால்டு-103, கெத்தை -10, கின்னகொரை-12, அப்பர் பவானி-220, குன்னூர்-17, பர்லியாறு- 15, கேத்தி-11, கோத்தகிரி -30, கொடநாடு-14, கூடலூர்-97, தேவாலா-106,

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 40 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1374 மில்லி மீட்டரும், சராசரியாக 80.82 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.




Tags:    

Similar News