செய்திகள்
கைது

கம்பம் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான வளையல் திருடிய பெண்

Published On 2019-07-31 12:14 GMT   |   Update On 2019-07-31 12:14 GMT
கம்பத்தில் நகைக்கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வளையல்களை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர். மேலும் திருட்டுசம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பெண்ணை தேடிவருகின்றனர்.

கம்பம்:

கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையில் உள்ள நகையின் மொத்த இருப்பை சரிபார்த்தார். அப்போது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 28 கிராம் அளவில், ஒரு ஜோடி வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, சம்பவத்தன்று கடைக்கு வந்த 2 பெண்கள் வளையல்களின் மாடலைப் பார்ப்பதுபோல் நடித்து அவற்றை திருடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் வளையல்களைத் திருடியது பள்ளபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆண்டி மனைவி பாண்டியம்மாள்(60), ஆவாரம்பட்டி அம்மன் கோயில் குளம் அருகே உள்ள தங்கப்பாண்டி மனைவி சரோஜா(40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தமபாளையம் டி.எஸ்.பி வீரபாண்டியின் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார்கள் மணிகண்டன், அழகுதுரை, சுந்தரபாண்டியன், பிரபு ஆகியோர் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக டெப்போ பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய பாண்டியம்மாளை மடக்கி பிடித்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 வளையல்களை கைப்பற்றினர். மேலும், இத்திருட்டு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சரோஜாவை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News