செய்திகள்
மோடி, ஜி ஜின்பிங்

சென்னையில் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு?

Published On 2019-07-22 09:01 GMT   |   Update On 2019-07-22 11:24 GMT
சென்னையில் வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்தித்து பேசலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னை:

இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே ஒரு தடவை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து 2-வது தடவையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதுபற்றி தெரிவிக்கப்பட்டதும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.

அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியா- சீன அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.

இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அந்த நாட்டு உயர்மட்டக் குழுவினரும், அதிகாரிகளும் உடன் வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றில் அவர்கள் வருகை தர உள்ளனர். எனவே அதற்கு ஏற்ப சீன அதிபர் வர இருக்கும் இடம் முடிவு செய்யப்பட உள்ளது.

பிரதமர் மோடி முதலில் தனது தொகுதியான வாரணாசிக்கு சீன அதிபரை வரவழைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் தரை இறக்கும் அளவுக்கு நீண்ட ஓடுபாதை கொண்ட வசதி இல்லை. இதையடுத்து தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு நகரில் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதன்படி சென்னை நகரில் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்த செய்யலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தென் மாநிலங்களில் எந்த நகரில் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் சின்னங்கள் அதிகம் உள்ளதோ அங்கு மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்தலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் சீனாவின் பிரமாண்ட விமானம் தரை இறங்கும் வசதியும் வேண்டும்.

ஐதராபாத்திலும் மிகப் பெரிய ஓடுபாதை கொண்ட விமான நிலையம் இருக்கிறது. என்றாலும் சென்னையில் பாரம்பரியத்தை காட்டும் வரலாற்று சின்னங்கள் அதிகம் இருப்பதால் சென்னையில் இந்திய, சீன தலைவர்களின் சந்திப்பு நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இந்தியா- சீன நாடுகளிடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்காக சீன அதிபருடன் நிறைய அதிகாரிகள் உடன் வருகிறார்கள்.

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு முடிந்ததும் அந்த அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டியதுள்ளது. மகாபலிபுரம், காஞ்சிபுரம் உள்பட பல இடங்களை இதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

காஞ்சிபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையே வரலாற்று ஆன்மிக தொடர்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை சென்னையில் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது சீன அதிபரின் வருகையை உறுதி செய்வார்.

அதன் பிறகு சீன அதிபர் தென் இந்தியாவில் எங்கு வருவார் என்பது உறுதியாகும். சீன அதிபரின் விமானம் தலைநகர் பீஜிங்கில் இருந்து நேரடியாக தென் இந்தியாவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News