செய்திகள்
மாதிரி படம்

புதிய வரி விதித்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை - சங்க தலைவர்

Published On 2019-07-19 06:32 GMT   |   Update On 2019-07-19 11:24 GMT
புதிய வரியை அரசு குறைக்கவில்லை என்றால் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று சங்க தலைவர் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய மற்றும் படுக்கை, இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களை பதிவு செய்வது, அனுமதியளிக்கும் நடைமுறை இல்லாமல் இருந்தது.

இதனால் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதுச்சேரி, நாகலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அந்த பேருந்துகளுக்கு வரிவிதிக்க சட்டதிருத்த மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.4 ஆயிரம், ஒரு இருக்கைக்கு ரூ.2 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். ஆம்னி பஸ்களுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்படாமல் உடனடியாக அமலுக்கு வரும். இன்று அல்லது நாளை இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

புதிய வரிவிதிப்புக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆம்னி பஸ்களின் கட்டணம் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அப்சல் (பர்வின் டிராவல்ஸ்) கூறியதாவது:-

ஏற்கனவே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு புதியதாக வரி விதித்தால் இத்தொழில் முடங்கி விடும்.வாரத்தின் இறுதி நாட்கள், விசே‌ஷ நாட்களில் மட்டும் தான் இருக்கைகள் நிரம்புகின்றன. மற்ற நாட்களில் குறைந்த அளவு பயணிகளுடன் பஸ்களை இயக்குகிறோம்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இத்தொழில் புதிய வரிவிதிப்பால் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆம்னி பஸ் ஆப்ரேட்டர்களின் நிலைமை குறித்தும் இத்தொழில் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருவது குறித்தும் அரசுக்கு முறையிட உள்ளோம். எங்கள் கோரிக்கையினை ஏற்று புதிய வரிவிதிப்பை ரத்து செய்தால் இத்தொழில் வளர்ச்சி அடையும். அரசு இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும்.

வரி விதித்தால் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. எந்த அளவு உயர்வு இருக்கும் என்பதை இப்போது சொல்ல இயலாது. அரசின் முடிவை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.

Tags:    

Similar News