search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ் கட்டணம்"

    • சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது.
    • ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் 11-ந் தேதி முதல் இயக்க திட்டமிடபட்டு இருந்தது. 12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக 8 ஆயிரத்தும் மேலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சொந்த ஊர் செல்ல அரசு, ஆம்னி பஸ்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பொங்கல் பயணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்ற நிலையில் அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

    இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான கட்டணத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உள்ளதால் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகைக் காலம் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் இந்த ஆண்டு மிக கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் மன வேதனை அடைந்தனர்.

    மேலும் அரசு விரைவு பஸ்கள் அனத்தும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் மட்டும் செல்வதால் பெரும்பாலானவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வடபழனி, அசோக்நகர், கிண்டி கத்திப்பாரா, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணம் செய்வோர் அரசு பஸ்களை விட தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். அதேபோல் அவர்களுக்கு வசதியாக உள்ளது.

    அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பின. அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு தாமதத்தால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.

    இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.
    • ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.

    அக்டோபர் 2-ந்தேதியான இன்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4410 கட்டணம் பெறப்படுகிறது.

    பூஜை விடுமுறை நாட்களுக்காக வரும் 20-ந்தேதி சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24-ந் தேதி சென்னைக்கு திரும்பவும் அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநாட்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700, சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை.

    ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
    • ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத்துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல்.

    ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத்துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

    ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    ×