செய்திகள்
பண மோசடி

அரசு பள்ளி மாணவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி - தலைமை ஆசிரியையிடம் விசாரணை

Published On 2019-07-16 09:51 GMT   |   Update On 2019-07-16 09:51 GMT
ஒரத்தநாட்டில் அரசு பள்ளி மாணவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு சுமார் 800 மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்க நிலையில் இப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக கல்வி தரம் குறைந்து, சுகாதாரம் இல்லாமல் மாணவிகள் சிரமப்படும் வகையில் பள்ளி நிர்வாகம் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இப்பள்ளி நிர்வாகத்தை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரி ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராஜா ஆய்வு குழுவினருடன் ஒரத்தநாடு மகளிர் மேல்நிலைப்பள்ளி சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது தலைமை ஆசிரியை சுப்புலட்சுமியிடம் அவர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தலைமை ஆசிரியை சுப்பு லட்சுமி, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளிடம் 2018- 2020 ம் கல்வி கட்டணத்தில் அரசு நிர்ணய கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக பணம் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதனால் மாவட்ட கல்வி அதிகாரி ராஜா மற்றும் குழுவினர் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமியை துருவி, துருவி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதில் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி மாணவிகள் அரசு கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்ததும், லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மேலும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பராமரிப்பிற்காகவும் அரசு ஒதுக்கிய தொகையை பயன்படுத்தாமல் முறைக் கேட்டில் ஈடுபட்டுள்ளதும், தெரிய வந்தது.இதுதவிர பள்ளியில் மாணவிகளுக்காக எந்தவித இதர திறமைகளுக்கான போட்டிகள் எதுவும் நடத்தப்படாமலும், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுபற்றி ஒரத்தநாடு மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராஜா கூறியதாவது:-

தலைமை ஆசிரியை சுப்பு லட்சுமியின் முறைகேடுகள் குறித்து பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மீது துறை ரீதியாக கடும் நடடிவக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News