செய்திகள்
தங்க நகை மீட்பு மாதிரிபடம்

தக்கலை அருகே கொள்ளை போனதாக கூறப்பட்ட 78 பவுன் நகை மீட்பு

Published On 2019-07-07 18:13 GMT   |   Update On 2019-07-07 18:13 GMT
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை போனதாக கூறப்பட்ட 78 பவுன் நகை இன்னொரு அறையில் இருந்தது மீட்கப்பட்டது.
பத்மநாபபுரம்:

தக்கலை அருகே வெள்ளியோடு ஆதாலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 50). இவர், வெளிநாட்டில் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவருடைய மனைவி லியோ பிரின்ஸ் மினி (48).

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார்கள். இதனால், லியோ பிரின்ஸ் மினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக, இவரது வீட்டில் மர பீரோ செய்வதற்காக இரண்டு தொழிலாளர்கள் வந்து சென்றனர்.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் படுக்கை அறையில் இருந்த 78 பவுன் நகைகளை காணவில்லை எனவும், அதை யாரோ கொள்ளையடித்து சென்றதாகவும் லியோ பிரின்ஸ் மினி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

முதற்கட்டமாக மர பீரோ செய்து வந்த இரண்டு தொழிலாளர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கும் கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் லியோ பிரின்ஸ் மினியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜாண்சன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

தொடர்ந்து, வீட்டை போலீசார் சோதனை செய்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 78 பவுன் நகை இன்னொரு அறையில் இருந்ததை கண்டு பிடித்து மீட்டனர். இதுகுறித்து லியோ பிரின்ஸ் மினியிடம் கேட்ட போது, நகை வைத்திருந்த இடத்தை மறந்து போலீசில் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News