செய்திகள்

கோவையில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-06-21 11:58 GMT   |   Update On 2019-06-21 11:58 GMT
கோவை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-19-ம் ஆண்டிற்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியுள்ளவர்களுக்கு 20-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.31,250 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் அமைப்பு மற்றும் அமைப்பு சார நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், தொண்டு நிறுவனம் மற்றும் சமுதாய அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மிகவும் பின்தங்கியவர்கள், மலைப்பகுதிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதிர் கன்னிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கலெக் டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தாங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் வயது சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்று, வருமானச்சான்று, கல்வி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதிச்சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News