செய்திகள்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது - பங்க் நிர்வாகிகள் அறிவிப்பு

Published On 2019-06-18 06:18 GMT   |   Update On 2019-06-18 07:23 GMT
ஊத்துக்கோட்டை பகுதியில் ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று பங்க் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் தான் அதிக சதவிகிதம் பேர் பலியாகின்றனர் என்ற புள்ளி விவரம் சமீபத்தில் வெளிவந்தது.

இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடை பெற்றது. ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமை தாங்கினார்.

 


இதில் ஊத்துக்கோட்டை, பெரிபாளையம், ஆரணி, வெங்கல், பென்னாலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் நிரப்ப வரும் நபர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று போலீசார் ஆலோசனை கூறினர்.

அப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறியதாவது:-

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருக்க விழிப்புணர்வு செய்வோம். வருகிற 20-ந் தேதி முதல் ஹெல்மேட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மாட்டோம்.

அதே போல் லைசென்ஸ் இல்லாமல் வந்தாலும், மது குடித்து வந்தாலும் பெட்ரொல் வழங்க மாட்டோம். ஹெல்மெட் கட்டாயம் குறித்து ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் பேனர்கள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News