செய்திகள்

சைதாப்பேட்டையில் தெருத்தெருவாக தண்ணீர் சப்ளை செய்யும் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ

Published On 2019-06-16 10:50 GMT   |   Update On 2019-06-16 11:56 GMT
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அந்த தொகுதியில் தண்ணீர் சப்ளையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை:

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். தனியார் லாரிகளில் கூடுதல் விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற நிலையே நிலவுகிறது.

குடிநீர் வாரியம் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. தனியார்களும் முடிந்தவரை உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே சென்னை மக்களின் தவிப்பை போக்க முடியும்.

சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அந்த தொகுதியில் தண்ணீர் சப்ளையில் ஈடுபட்டுள்ளார்.

திருப்போரூரில் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி தண்ணீர் காலையிலும், மாலையில் ஒரு லாரி தண்ணீரும் கொண்டு வரப்படுகிறது.

இந்த தண்ணீரை தெரு, தெருவாக தினமும் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மா.சுப்பிரமணியன் நேரில் விநியோகிக்கிறார்.

தண்ணீர் லாரி அருகில் அவரே நாற்காலியில் அமர்ந்து தண்ணீர் விடுகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-

30 நாட்களுக்கு தினமும் 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை தெருவில் கொண்டு விட்டு விட்டு சென்று விட்டால் தண்ணீரை விற்பது போன்ற தேவையற்ற பிரச்சினைகள் வருகிறது. எனவே நான் நேரில் வழங்குகிறேன்.

இவ்வாறு வழங்குவதால் பொதுமக்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. மேலும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 30 டேங்குகளும் அமைத்துள்ளோம். அதில் குடிநீர் வாரியம் தண்ணீர் விடுகிறது.

தற்போது 30 நாட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். அதன் பிறகும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News