செய்திகள்

நெற்குன்றம் - மதுரவாயலில் அரிவாளால் வெட்டி வழிப்பறி: 5 பேர் கைது

Published On 2019-06-13 08:49 GMT   |   Update On 2019-06-13 08:49 GMT
நெற்குன்றம் - மதுரவாயலில் அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவன ஊழியர்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெற்குன்றம்-மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது சரவணனை வழிமறித்த 8 பேர் கும்பல் அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் மணிபர்ஸை பறித்தனர்.

அவ்வழியே வந்த பூபதி என்பவரை கத்தியால் வெட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்தனர். மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஏழுமலை என்பவரை பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கொடுக்க மறுத்த ஏழுமலையை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோயம்பேடு போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே கும்பல் மதுரவாயல் சீமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்த கணேசன் என்பவரை கத்தியால் வெட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். அவ்வழியே வந்த பூவரசு என்பவரை பணம் கேட்டு மிரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், தீபக்குமார் மற்றும் போலீசார் வழிப்பறி கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரவாயலைச் சேர்ந்த விக்ணேஷ் என்கிற பெண்டு விக்கி, நெற்குன்றத்தைச் சேர்ந்த தீனா, மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த அரவிந்த், சேத்துப்பட்டைச் சேர்ந்த மணிகண்டன், நெற்குன்றத்தைச் சேர்ந்த பிச்சுமணி ஆகிய 5 பேரை ஆலப்பாக்கம் அருகே கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன், 2 கத்தி, பணம் ரூ800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் தக்காளி பிரபா, பெரியசாமி, கிஷோர் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News