செய்திகள்

சிங்காநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

Published On 2019-06-05 11:23 GMT   |   Update On 2019-06-05 11:23 GMT
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிங்காநல்லூர்:

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் மனோஜ் (வயது 27), அதேபகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்.

பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார். அதேபகுதியிலுள்ள வங்கி அருகே சென்றபோது கத்தியுடன் நின்ற 3 பேர் அவரை வழி மறித்தனர். அவரிடம் பணம் தராவிட்டால் குத்தி விடுவதாக மிரட்டி பணம் பறித்தனர்.

இது குறித்து மனோஜ் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒண்டிப்புதூர் பகுதியில் சுற்றி திரிந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் ஓடினர்.

அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் மூகாம்பிகை நகர் வல்லரசு (19), போயர் வீதி கார்த்தி (19) மற்றும் தர்மபுரி மாவட்டம் கரியமங்கலத்தை சேர்ந்த வெற்றி வேல் (25) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் மனோஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது இதேபோல் பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News