செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2019-06-05 10:15 GMT   |   Update On 2019-06-05 10:15 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மின்சாரம் இல்லாததால் அவதி அடைந்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கலில் அக்னிநட்சத்திரம் முடிந்த போதிலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த 2 நாட்களாக மேகம் திரண்டு மழை வருவதுபோல அறிகுறி தென்பட்டாலும் ஏமாற்றி சென்றது.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணி முதல் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடங்குவதற்கு முன்பாகவே நகர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ½ மணி நேரம் வெளுத்து கட்டிய மழையினால் வெப்பம் தணிந்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்த படியே வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.

நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்ததால் இந்த மழை பொதுமக்களை ஓரளவு ஆறுதல் அடைய வைத்தது. நகரில் பல பகுதிகளில் பெண்கள் மழையில் நனைந்தபடி மழை நீரை பாத்திரங்களில் சேகரித்து வைத்தனர்.

இதேபோல் வடமதுரை, அய்யலூர், எரியோடு, சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம், ஆத்தூர், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பல மணி நேரம் மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு அறிகுறியாக இந்த மழை இருக்கும் என்றும் மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். ஆனால் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் மின் இணைப்பு பல மணி நேரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Tags:    

Similar News