செய்திகள்

தனுஷ்கோடியில் இருந்து இடம்பெயர்ந்த பிளமிங்கோ பறவைகள்

Published On 2019-03-18 18:13 GMT   |   Update On 2019-03-18 18:13 GMT
தனுஷ்கோடி பகுதியில் இருந்து பிளமிங்கோ பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடியில் உள்ள பாலம், கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன் பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்துபோன கட்டிடங்களையும், கடல் சங்கமிக்கும் கடல் பகுதியான அரிச்சல்முனை கடல் பகுதியையும் பார்த்து ரசித்து விட்டு திரும்புவர்.

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த கடல் புறாக்கள் அனைத்துமே தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளில் வாழ்ந்து வருகின்றன.

மணல் திட்டுகளில் வாழும் கடல் புறாக்கள் பகல் நேரங்களில் மீன்களை பிடித்து வேட்டையாடவும்,ஓய்வெடுக்கவும் எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை கடற்கரை பகுதி வரை அதிகமாக பார்க்க முடியும். மேலும் தனுஷ்கோடி கடல் பகுதியில் மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபடும் போதும் வலையில் இருந்து கடல் மற்றும் கடற்கரையில் விழும் மீன்களையும் பிடித்து சாப்பிட கடல் புறாக்கள் கூட்டம் அலை மோதும்.

அதுபோல் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வரும் பிளமிங்கோ பறவைகளும் இந்த ஆண்டு கோதண்ட ராமர் கோவில் கடல் பகுதிக்கு அதிகஅளவில் வந்துள்ளன.பிளிமிங்கோ பறவைகளோடு கடல் காவா, நீர்க்காகம் உள்ளிட்ட பல விதமான பறவைகளும் கூட்டமாக நின்று இரை தேடி வருவதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் குவிந்துள்ள பிளமிங்கோ மற்றும் கடல் புறாக்களை மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது.இதனால் இனப் பெருக்கத்திற்காக வந்துள்ள ஏராளமான பிளமிங்கோ பறவைகள் இங்கிருந்து வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.எனவே இது குறித்து வனத் துறையினர் தனுஷ்கோடி கடல் பகுதியில் பறவைகளை வேட்டைாயடும் மர்ம நபர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News