செய்திகள்

கமல்ஹாசன் அழைத்தால் கூட்டணி பற்றி பேசலாம் - சரத்குமார் பேட்டி

Published On 2019-03-01 06:44 GMT   |   Update On 2019-03-01 06:44 GMT
கமல்ஹாசன் அழைத்தால் கூட்டணி பற்றி பேசலாம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். #SarathKumar #KamalHassan
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத் குமார், பொருளாளராக ஏ.என்.சுந்தரேசன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:-

‘நான் அரசியலில் 22 ஆண்டுகள் பயணித்துள்ளேன். அ.தி.மு.க.வில் 10 ஆண்டு கொள்கை பரப்பு செயலாளர் போலவே செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் அமைச்சர்கள், நிர்வாகிகள் இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.

அதேபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியும் என்னை நல்ல இடத்தில் வைத்திருந்தார். ஆனால் அந்த கட்சி நிர்வாகிகளுக்கு எனது திறமை பிடிக்காமல் போய்விட்டது. தற்போது உள்ள தலைவருக்கு என்னை பிடிக்காது. அவர் திறமைசாலியாக இருந்து இருந்தால் எப்போதோ முதல்வராக ஆகி இருக்கலாம்.

யாரும் என்னை அரசியலில் முழுமையாக வர விடமாட்டேன் என்கிறார்கள். நான் வந்தால் அவர்கள் அரசியல் வாழ்க்கை போய் விடுமோ என்று பயப்படுகிறார்கள். பா.ம.க. 2 கட்சிகளையும் மண்ணு, மக்கு என்று சொல்லிவிட்டு இப்போது அருகில் அமர்ந்து பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?

அ.தி.மு.க.வை கேலி, கிண்டல் செய்துவிட்டு இப்போது முதல்வர் வலது புறமும், துணை முதல்வர் இடதுபுறமும் அமர கிண்டல் செய்தவர்கள் இடையில் அமர்ந்து பேசுகிறார்கள். இதுவா அரசியல்? பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சுதந்திரம் பறிபோகும்.

எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. என்னிடம் உழைப்பு இருக்கிறது. மக்களிடம் நேரில் செல்லக்கூடிய அரசியல் தலைவன் நான். வெற்றிடம் என்பது எங்கும் கிடையாது. மக்களிடம் நமக்கான ஒரு நல்ல இடத்தை உருவாக்கிக்கொள்ள கட்சியினர் உழைக்க வேண்டும்.

எத்தனை தடவை கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி வேகமாக எழுகிறோம்? என்பதுதான் முக்கியம். நமக்கும் தோல்வி கிடைத்திருக்கிறது. அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். விருதுநகரில் பெருந்தலைவர் காமராசருக்கு ஜூலை மாதம் 15-ந் தேதி மணிமண்டபம் திறக்கப்படும்’.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ச.ம.க.வின் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை வருகிற 5ந்தேதி அறிவிப்பேன். கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது அன்று தெரியும்.

கே:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததா?

ப:- 2 கட்சிகளுக்கும் எனது உழைப்பு தெரியும். அதற்கு மரியாதை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் பேசுபவர்கள் கூட்டணி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட குழு அல்ல. தகுதியானவர்கள் அழைத்து பேசினால் யோசிக்கலாம்.

கே:- அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

ப:- பா.ம.க. சேர்ந்ததால் பலவீனம் ஏற்பட்டு இருக்கிறது.

கே:- அவர்களுடன் இணையும் வாய்ப்பு இல்லையா?

ப:- பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என தெரிவித்திருந்தேனே தவிர அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என கூறவில்லை.

கே:- ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படும் என்று விஷால் கூறியுள்ளாரே?

ப:- அவர் என்ன அரசியல் ஞானியா?

கே:- கமல்ஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா?

ப:- ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முன்பே நான் கட்சி ஆரம்பித்து விட்டேன். நாங்கள் தான் அவர்களை விட மூத்த கட்சி. பிரபலம் என்ற அடிப்படையில் அவர்கள் உயர்ந்தவர்கள், ஆனால் அரசியலில் நானே அவர்களை விட பெரியவன். கமல்ஹாசன் என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பார்க்கலாம்.

இவ்வாறு சரத்குமார் பதில் அளித்தார்.

பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில வர்த் தகரணி துணை செயலாளர் ஆதித்தன், மாவட்ட அமைப்பாளர் ஜே.டிக்சன், செயலாளர் முருகேச பாண்டியன் உள்பட மாநிலமாவட்ட நிர்வாகிகள், பிற மாநில செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாநில துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர் வரவேற்றார். #SarathKumar #KamalHassan

Tags:    

Similar News