செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-02-27 05:09 GMT   |   Update On 2019-02-27 05:09 GMT
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #Parliamentelection
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும் கட்சிகள் எவை என்பது உறுதி செய்யப்படவில்லை.

கூட்டணி கட்சிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டபிறகு எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது உறுதி செய்யப்படும். அ.தி.மு.க., பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த இடங்களில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அது முடிவு செய்யப்பட்ட பிறகு அதில் ஒரு தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

அதுகுறித்து முடிவு செய்யப்பட்டபிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க.வினர் மதவாத, இனவாத அரசியலை தூண்டி விடுகிறார்கள். அவர்கள் எங்களுக்கு எதிராக இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி அல்லது தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.



இவற்றில் பா.ஜனதாவுக்கு தூத்துக்குடி ஒதுக்கப்படுமா? தென்சென்னை ஒதுக்கப்படுமா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே தமிழிசை சவுந்தரராஜன் இந்த தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilisaiSoundararajan #Parliamentelection
Tags:    

Similar News