செய்திகள்

இரும்பாலை அருகே எருதாட்ட மாடு முட்டி தொழிலாளி பலி

Published On 2019-02-02 04:45 GMT   |   Update On 2019-03-02 05:14 GMT
இரும்பாலை அருகே எருதாட்ட மாடு முட்டி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கேட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அந்த கோவிலில் நேற்று எருதாட்ட விழா நடந்தது.

இந்த எருதாட்ட விழாவில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கம் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இதே போல மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

எருதாட்ட விழா முடிந்ததும் எருதாட்டத்தில் பங்கேற்ற மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த மாடுகளை இரும்பாலையை அடுத்த பவர் கிரிப்ட் பகுதியில் அழைத்து வந்தனர்.

அப்போது சேலம் மாவட்டம் இடங்கணாசாலை பகுதியை சேர்ந்த தொழிலாளியான சுப்புராஜ் (43) என்பவர் சாலையோரம் அமர்ந்திருந்தார். சுப்பு ராஜ் குடிபோதையில் இருந்ததாகவும் அந்த மாடுகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் மிரண்டு ஓடிய ஒரு மாடு மீண்டும் திரும்பி வந்து சுப்புராஜின் கழுத்தில் வேகமாக குத்தி தூக்கி வீசியது. இதில் கழுத்து உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News