செய்திகள்

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன

Published On 2019-01-30 11:54 GMT   |   Update On 2019-01-30 11:54 GMT
ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. #Jactogeo
சென்னை:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.

இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். சிலர் பணிக்கு திரும்புவதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் தவிர மீதி அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் வழக்கம் போல நடந்தன.

ஆனால் இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.

ஈரோட்டில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 97 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வந்தனர். தொடக்க, நடுபள்ளி ஆசிரியர்கள் 70 சதவீதம் பணிக்கு வந்தனர்.

ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் 99.7 சதவீதம் பேரும், தொடக்க கல்வித்துறையில் 97.78 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பி உள்ளனர் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 98 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 60 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மீதி ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் 98 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைபள்ளிகள் உள்ளன. இங்கு பணியாற்றி வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்.

கரூர் மாவட்டம் முழுவதும் 85 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று 97 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 80-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளதால் அவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 100 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிய நிலையில் இன்று அனைவருமே பள்ளிக்கு திரும்பியதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்று காலை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றது. குறைவான அளவு ஆசிரியர்களே பணிக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. ஒருசில நிர்வாகிகள் மட்டும் பணிக்கு செல்லவில்லை. போராட்டத்தில் கைதான ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,644 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 52 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இன்று அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்.

இதேபோல் வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. #Jactogeo
Tags:    

Similar News