செய்திகள்

திருவள்ளூரில் பள்ளிகளை பூட்டி சாவியை கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஆசிரியர்கள்

Published On 2019-01-23 10:00 GMT   |   Update On 2019-01-23 10:00 GMT
போராட்டம் காரணமாக திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளைப் பூட்டி சாவியை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.

போராட்டம் காரணமாக திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளைப் பூட்டி சாவியை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் பள்ளிகள் பூட்டியே கிடக்கின்றன.

மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாகச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் ஒரு சில பள்ளிகளில் மாணவிகளே பாடம் கற்பித்தனர்.

வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட அனைத்து வட்ட தலை நகரங்களிலும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராடத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 13 வட்டத்திலும் மறியல் போராட்டம் நடந்தது. #tamilnews
Tags:    

Similar News