செய்திகள்

நாளை காணும் பொங்கல் - சுற்றுலா மையங்களுக்கு 480 சிறப்பு பஸ்கள்

Published On 2019-01-16 07:40 GMT   |   Update On 2019-01-16 10:03 GMT
நாளை காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #KaanumPongal
சென்னை:

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நாளை காணும் பொங்கல் தினத்தில் குடும்பமாக பொழுதுபோக்கு மையங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

கூட்டு குடும்பமாகவோ, நண்பர்களாகவோ வீடுகளில் உணவினை சமைத்து பாத்திரங்களில் எடுத்து சென்று கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.

சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் காணும் பொங்கல் தினத்தில் மக்கள் குவிந்து விடுவார்கள். சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக இருப்பது மெரினா கடற்கரையாகும்.

மோட்டார் சைக்கிள், கார்களில் இங்கு மக்கள் அதிகமாக வருவார்கள். ஏழை-எளிய மக்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்வார்கள். மெரினா தவிர அரசு பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம், மகாபலிபுரம், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளுக்கும் செல்வார்கள்.



மேலும் வி.ஜி.பி., எம்.ஜி.எம்., குயின்ஸ்லேண்ட் போன்ற பொழுதுபோக்கு மையங்களில் அதிகளவு கூடுவார்கள். பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை நகரின் அனைத்து பஸ் நிலையங்களில் இருந்தும் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் கூடுதலாக பஸ்கள் விடப்படுகிறது.

நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிராட்வே, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், அடையார், ஆதம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. #KaanumPongal

Tags:    

Similar News