செய்திகள்

திண்டுக்கல் அருகே நத்தமாடிப்பட்டியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு - 400 காளைகள் முன் பதிவு

Published On 2019-01-14 10:02 GMT   |   Update On 2019-01-14 10:02 GMT
நத்தமாடிப்பட்டியில் வரும் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு 400 காளைகள் முன் பதிவு செய்துள்ளனர். #Jallikattu
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே போல் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

முதல் கட்டமாக வரும் 17-ந் தேதி பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூர், நத்தமாடிப்பட்டி, 22-ந் தேதி உலகம்பட்டி, பிப்ரவரி 3-ந் தேதி ஏ.வேள்ளோடு, 8-ந் தேதி கொசவபட்டி, 10-ந் தேதி மறவபட்டி, தவசிமடை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரினர்.

இதில் வரும் 17-ந் தேதி நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் வந்தன.

இதில் 400 காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் 300 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் போட்டியாக பழனி நெய்க்காரபட்டியிலும், 2-வதாக நத்தமாடிப்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனால் வாடிவாசல் அமைக்கும் பணியில் விழா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விழா நடைபெறுவதற்கு முன்பாக அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றும் காளைகளையும் மாடு பிடி வீரர்களின் உடல் தகுதியையும் இறுதி செய்த பிறகு அதற்கான சான்று அளிக்கப்படும். திண்டுக்கல் அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நத்தமாடிப்பட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. #Jallikattu

Tags:    

Similar News