செய்திகள்

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்த பஸ்-லாரி திருட்டு

Published On 2019-01-13 10:20 GMT   |   Update On 2019-01-13 10:20 GMT
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்த பஸ்-லாரி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

இங்கு விதிமுறை மீறி இயக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மகராஷ்டிராவில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை ஊத்துக்கோட்டை சந்திப்பில் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் உரிய ஆவணங்கள் இல்லாததால் பொன்னேரி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த லாரியும், ஆம்னி பஸ்சும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் காம்பவுண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டு இருந்த லாரியையும், ஆம்னி பஸ்சையும் அங்கிருந்து திருடி ஓட்டிச் சென்று விட்டனர்.

லாரியும், பஸ்சும் திருடு போய் இருப்பதை கண்டு போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வேறு எந்த வாகனங்களும் திருட்டு போய் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News