செய்திகள்

தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது- உயர்நீதிமன்றம்

Published On 2019-01-10 07:27 GMT   |   Update On 2019-01-10 07:27 GMT
தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. #PlasticBan #MadrasHC
சென்னை:

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பிளாஸ்டிக் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில், தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது.

ஆனால், அதிகாரிகள் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். எங்கள் நிறுவனத்துக்குள் வந்து தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமானவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

‘தமிழக அரசு எந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதோ, அந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அரசாணை குறித்து சரியான புரிதல் இல்லாமல், சில அதிகாரிகள் தடை செய்யப்படாத பொருட்களை பறிமுதல் செய்து இருக்கலாம்.

எனவே, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது. அதேநேரம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.’

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்று அரசு தரப்பில், இந்த மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #PlasticBan #MadrasHC
Tags:    

Similar News