செய்திகள்

அமைச்சர் சிவி சண்முகத்திடம் குறுக்கு விசாரணை நடத்துவோம்- சசிகலா வக்கீல் பேட்டி

Published On 2019-01-01 08:26 GMT   |   Update On 2019-01-01 09:42 GMT
அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #CVShanmugam
சென்னை:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பரபரப்பாக கூறி இருந்தார். அதுமட்டுமல்ல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் சசிகலா தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் அன்று முதல் இன்று வரை இவர் அமைச்சராக இருந்தவர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றவர். அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.


சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டு தான் இவ்வளவு பில் வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அது தவறு. அப்பல்லோவில் தரப்பட்ட டீ, காபி, சமோசா, வடை, பிஸ்கட், மதிய உணவு ஆகியவற்றை யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். காலையில் இருந்து இரவு வரை இருந்த அமைச்சர்களுக்கும் தெரியும்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அது தவறு.

உண்மை என்னவென்றால் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது 19.10.2016 அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அம்மா பூரண நலம் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 31.10.2018 அன்று ஆணையத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து அதில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் கேபினட் கூட்டம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம்.

ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இடைக்கால அறிக்கை வழங்க ஆணைய விதிகளில் இடம் இல்லை என தெரிகிறது.

சி.வி.சண்முகம் இப்போது புதுப்புது தகவல்களை கூறுவதை பார்க்கும் போது கமி‌ஷன் விசாரணை இன்னும் 6 மாதத்துக்கு மேல் செல்லும் என தெரிகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மருத்துவத்தை தாண்டி அரசியல் நடைபெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #CVShanmugam #RajaSenthurpandian
Tags:    

Similar News