செய்திகள்

கும்பகோணம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2018-12-19 12:27 GMT   |   Update On 2018-12-19 12:27 GMT
கும்பகோணம் அருகே நேர்மையாக பணியாற்றிய சப்- இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அருள்குமார் (வயது30).

அப்பகுதியில் மணல் கொள்ளை, சாராயம் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்குமார், திறம்பட செயல்பட்டு வந்தார். இதனால் பொதுமக்களிடம் இவருக்கு தனி மரியாதை இருந்து வந்தது.

இந்தநிலையில் திடீரென இவர் பேராவூரணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பணிமாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை பல்வேறு இடங்களில் ஒட்டினர்.

இந்தநிலையில் நேற்று கும்பகோணம்-காரைக்கால் சாலையில் அந்தமங்கலம் என்ற இடத்தில் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்வதற்காக பொதுமக்கள் ஒன்று கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேர்மையாக பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர் அருள்குமாரை மீண்டும் திருநீலக்குடியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், சில தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என கூறினர். இதை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News