செய்திகள்

மதுரையில் உலக சாதனைக்காக தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தும் ஆசிரியை

Published On 2018-12-01 14:23 GMT   |   Update On 2018-12-01 14:23 GMT
மதுரையில் உலக சாதனைக்காக தொடர்ந்து 40 மணி நேரம் ஆசிரியை பாடம் நடத்தி வந்த சம்பவத்தை மாணவர்களும், பொதுமக்களும் வியந்து பாராட்டினர். #MaduraiTeacher
மதுரை:

மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் நஜிமுதீன். இவரது மனைவி சுலைகா பானு (வயது 45). இவர் மதுரை அரசரடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுலைகா பானு பாடம் நடத்துவதில் உலக சாதனை படைக்க விரும்பினார்.

இது தொடர்பாக உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பெற தேவையான முயற்சியையும் எடுத்த சுலைகாபானு தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தி சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு அவரது சாதனை முயற்சியை தொடங்கினார். மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் சுலைகா பானு பாடம் நடத்தி வருகிறார்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயில், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஜான் மோசஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலக சாதனையாளர் போட்டிக்கான பார்வையாளர்கள் நக்சத்திரா, விஷ்வநாத் ஆகியோர் முன்னிலையில் இந்த தொடர் கற்பித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

பார்வையாளர்களாக மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆசிரியை சுலைகா பானுவின் முயற்சியை மாணவர்களும், பொதுமக்களும் வியந்து பாராட்டினர்.

இன்று தொடங்கிய சுலைகாபானு வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 40 மணி நேரம் பாடம் நடத்தி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MaduraiTeacher
Tags:    

Similar News