செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மாணவன் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2018-11-24 10:09 GMT   |   Update On 2018-11-24 10:09 GMT
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூரில் தனியார் மனவளர்ச்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆலத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 50 மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி உள்ளது.

இந்த பள்ளியில் சங்கராபுரத்தை அடுத்த பவுஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சமிபுல்லா மகன் சபீர் (வயது 14) என்ற மாணவன் படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபீர் திடீரென விடுதியில் இருந்து வெளியே சென்றான். அதன்பின்பு அவன் விடுதிக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் அவனது பெற்றோர் பல இடங்களில் சபீரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஆலத்தூரில் உள்ள ஒரு தரைகிணற்றில் மாணவன் சபீர் பிணமாக மிதந்தான். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்புதுறையினரை வரவழைத்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) நாகேஷ்வரன் மற்றும் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பிணமாக மிதந்த சபீரை வெளியே எடுத்து வந்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதையடுத்து சபீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மாணவன் சபீர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Tags:    

Similar News