செய்திகள்

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

Published On 2018-11-21 09:29 GMT   |   Update On 2018-11-21 09:29 GMT
கஜா புயல் நிவாரணப்பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. #GajaCyclone #TNGovernment
சென்னை:

கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் தேனி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.

வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த நிலையில் புயல் நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படும். புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.600 வீதமும், விழுந்த மரங்களை வெட்டி அகற்ற தலா 500 ரூபாயும் வழங்கப்படும்.

புயலினால் முறிந்து சேதம் அடைந்த முந்திரி, மா, பலா மரங்களை வெட்டி அகற்ற தலா ரூ.500 வீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பு, கால்நடை உடமைகளுக்காக ரூ.205.87 கோடி, சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.100 கோடி, பயிர் சேதத்துக்கு ரூ.300 கோடி, சாலை, குடிநீர் மற்றும் உள்கட்டமைப்புக்கு ரூ.102.05 கோடி, மீன்வளத்துக்கு ரூ.41.63 கோடி, மின்சாரத்துக்கு ரூ.200 கோடி ஆக மொத்தம் ரூ.1000 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. #GajaCyclone #TNGovernment
 
Tags:    

Similar News