செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்பு இல்லை- அமைச்சர் மணிகண்டன் தகவல்

Published On 2018-11-17 11:28 GMT   |   Update On 2018-11-17 11:28 GMT
கஜா புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். #GajaCyclone
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அமைச்சர் மணிகண்டன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் கரையை கடந்த நேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் என மொத்தம் 2,123 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உணவு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. மீனவர்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு, படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை.

இயல்புநிலை திரும்பியதையடுத்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களில் 2,051 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தெற்கு கரையூர் என்ற கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தனுஷ்கோடியை பகுதியைச் சார்ந்த 28 குடும்பங்களுக்கு (72 நபர்கள்) சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகளைப் பொறுத்த வரை 10 இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல, 7 இடங்களில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு தற்போது மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலின் காரணமாக மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு இல்லை.

அதேவேளையில், 6 குடிசை வீடுகள் முழுமையாகவும், 7 குடிசை வீடுகள் பகுதியளவிலும், ஒரு காங்கிரீட் வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

வீடுகளின் சம்பந்தப்பட்ட உரிமைதாரர்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் வீரராகவராவ், வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் பலர் உடனிருந்தனர். #GajaCyclone
Tags:    

Similar News