செய்திகள்

திண்டுக்கல் கக்கன் நகரில் 50 வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

Published On 2018-11-16 10:22 GMT   |   Update On 2018-11-16 10:22 GMT
திண்டுக்கல் நகரில் கொட்டித் தீர்த்த மழையினால் கக்கன் நகரில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. #Rain

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகரில் நேற்று இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதியான கக்கன் நகரில் மழை நீர் தேங்கி 50 வீடுகளுக்குள் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்களே தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இருந்த போதும் மழை பெய்து கொண்டே இருந்ததால் நீரை முழுமையாக அகற்ற முடியவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). கன மழைக்கு இவரது வீட்டின் சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் ராஜேஷ் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள வைவேஸ்புரம் முனியப்பன் நகரில் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மண் புழுஉரம் தயாரிக்கும் குடில் முற்றிலும் சேதமடைந்தது.

துள்ளுப்பட்டி கோம்பை பகுதியில் பலரது வீடுகளில் மேற்கூரைகள் பறந்து சென்றன. தாடிக்கொம்பு பெருமாள் கோவில் செல்லும் சாலையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

தாடிக்கொம்பு - இடையகோட்டை சாலையிலும், எமக்கலாபுரம் பகுதியிலும் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 60 மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேல்பள்ளம் பகுதியில் பல மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சாலையில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. மரங்கள் முறிந்து கடைகள் மீதும் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். #Rain

Tags:    

Similar News