செய்திகள்

கான்கிரீட் கலவை எந்திரங்களை திருடிய 3 பேர் கைது

Published On 2018-11-14 18:04 GMT   |   Update On 2018-11-14 18:04 GMT
கான்கிரீட் கலவை எந்திரங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த தண்ணீர் பந்தல் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது 32). இவர் கான்கிரீட் கலவை எந்திரத்தை வாடகைக்கு விட்டு வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த கான்கிரீட் கலவை எந்திரம் திருடுபோனது. இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் நான்குரோடு அருகே உள்ள ஷாஜகானுக்கு(50) சொந்தமான கான்கிரீட் கலவை கலக்கும் சிறிய எந்திரமும் திருடுபோனது. இதுகுறித்து வினோத்பாபுவும், ஷாஜகானும் தனித்தனியே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா முல்லைவாடியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன்(22) கான்கிரீட் கலவை எந்திரங்களை திருடி சென்றதும், அவருக்கு உடந்தையாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஒட்டர்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வினோத்(25) மற்றும் அதே தெருவை சேர்ந்த ராஜா(36) இருவரும் இருந்துள்ளனர் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கட்டிடத்தொழிலாளியான மணிகண்டன் ஆத்தூர்பகுதியில் இருந்து அடிக்கடி பெரம்பலூர் பகுதிக்கு கட்டிட கூலிவேலைக்காக வந்துள்ளார். கான்கிரீட் கலவை எந்திரங்கள் நிற்கும் இடத்தை மணிகண்டன் வினோத்திடம் சுட்டிக்காட்டி அதனை மினிலாரியில் கட்டி இழுத்துவந்துவிடுமாறு கூறியுள்ளார். வினோத் தனது மினி லாரியில் கான்கிரீட் கலவை எந்திரத்தை கட்டி இழுத்துவந்து மணிகண்டனிடம் சேர்த்துள்ளார். மணிகண்டன் அந்த எந்திரங்களை ராஜா மூலம் விலைக்கு விற்றுள்ளார். இதேபோல சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் உள்பட பல இடங்களில் மணிகண்டன் தலைமையிலான இந்த கும்பல் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இவ்வாறு கூறினர்.

கைதான 3 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News