செய்திகள்

தஞ்சையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பாதிப்பு

Published On 2018-10-29 11:31 GMT   |   Update On 2018-10-29 11:31 GMT
தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் டெங்கு - பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணித்து வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில் தினமும் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக டெங்கு கொசு தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இருந்து தான் வெளிவருகிறது. ஆகவே கடைகள், வீடுகள், அலுவலகங்கள், சாலை ஓரங்கள் என எங்கும் தண்ணீர் தேங்கி உள்ளதா? அவ்வாறு தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தண்ணீர் தேங்கிய வாறு கடைகளோ, வீடுகளோ இருந்தால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி கொண்டு தான் வருகிறது. தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர்கள் குழுவினர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வருபவர்களுக்கு தனியாக ஓ.பி. சீட்டு வழங்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக 3 டாக்டர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடியை சேர்ந்த 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது தஞ்சை அருகே உள்ள காரியப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு அந்த சிறுமி டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். #DenguFever
Tags:    

Similar News