செய்திகள்

கும்பகோணத்தில் அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு

Published On 2018-10-11 10:38 GMT   |   Update On 2018-10-11 10:38 GMT
அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்கப்பட்டதால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதியில் டாஸ்மாக் பார் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிலையில் அந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த பகுதியில் டாஸ்மாக் பார் இருப்பதால் அப்பகுதி யினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த வழியாக பெண்கள் யாரும் சென்று வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகாரை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சத்தியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ஆகியோர் அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படும் டாஸ்மாக் பாருக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த டாஸ்மாக் பாரில் தாராசுரம் கீழதெருவை சேர்ந்த பிரகாஷ் (38) என்பவர் பணியில் இருந்தார். அங்கு அதிகாரிகள் சோதனை நடத்திய போது வேறு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனே அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி அந்த கடை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழியர் பிரபாகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News