செய்திகள்

போடியில் கனமழை - மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு

Published On 2018-10-10 06:07 GMT   |   Update On 2018-10-10 06:07 GMT
போடியில் கனமழை காரணமாக போடிமெட்டு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. #Rain

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. விவசாய பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக போடியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் போடி மெட்டு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன.

இன்று அதிகாலை ஆய்வு செய்த நெடுஞ்சாலையத்துறையினர் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள் மட்டுமே போடிமெட்டு மலைச்சாலையில் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் கேரளாவில் இருந்து கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன. இதனால் தமிழக பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாறைகள் உருண்டு விழுந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சென்று பார்வையிட்டனர். உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வேறு ஏதேனும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்றும் சோதனையிட்டனர். அதன்பிறகு வானங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

கடந்த வருடத்தில் பெய்த கனமழையின்போது ராட்சத பறைகள் சாலையின் நடுவே விழுந்து பல நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதுபோன்ற அபாயம் ஏற்படாமல் இருக்கவும் சாலை ஓரம் லேசான நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

மலைச்சாலைகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லக்கூடாது என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளனர். #Rain

Tags:    

Similar News