செய்திகள்

சசிகலாவை சந்திக்க தம்பித்துரை தூது- செந்தில்பாலாஜி பேட்டி

Published On 2018-09-30 14:22 GMT   |   Update On 2018-09-30 14:36 GMT
சசிகலாவை பார்க்க தம்பிதுரை , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார் என்று செந்தில்பாலாஜி கூறினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

கரூர்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி க.பரமத்தியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நான் வாக்கு சேகரிக்க சென்ற போது தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது கரூர் மாவட்டத்திற்கு 5ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கு மேல் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதல்வராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது சசிகலா, டி.டி.வி.தினகரன் வழி காட்டுதல்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடிவு செய்தோம். அவரை முதல்வராக தேர்வு செய்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை மாற்றி விட்டு டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்குவோம். அதன்பின்னர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.


அ.தி.மு.க. ஆட்சியின் போது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாநில அரசு மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சித்த போது, தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதி பெற்று தருவதாக கூறினார். இதனால் நான் மாநில அரசு மூலம் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டேன். ஆனால் இப்போது வரை அந்த நிதியை அவர் பெற்றுத்தரவில்லை.

எவ்வளவோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் 2 முறை நீதிமன்றம் சென்று இந்த உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது. இது அறவழி போராட்டம். இந்த உண்ணாவிரதம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் உண்ணாவிரத த்தில் அவர் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் முதன் முதலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்ட போது தேர்தலை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சதி செய்தனர். ஏனென்றால் தினகரன் வெற்றி பெற்று முதல்வராகி விடுவாரோ? என்று எண்ணி அவர்கள் இந்த சதி செயலை செய்துள்ளனர்.

இதற்காக ஆர்.கே. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக அவர்களாகவே ஒரு துண்டு சீட்டை தயார் செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சூழ்ச்சிகளை முறியடித்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனையோ பைல்கள் இருக்கும். ஆனால் பணப் பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டு மட்டும் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. எனவே இதில் சதி நடந்துள்ளது.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்று அதனை நிறைவேற்றினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரவக்குறிச்சி தொகுதியை புறக்கணித்து வருகிறது.


சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க பாராளுமன்ற துணை சபாநாயகர் , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினகரனிடம் பேசிய தம்பிதுரை, இரவில் வந்து சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காலையில் என்னை சந்திக்க வாருங்கள். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் அ.தி.மு.க. வையும், சின்னத்தையும் கைப்பற்றி விடுவார் என்பதால், இப்போதே தம்பிதுரை துண்டு போட்டு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். இனி அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் பெற முடியாது.

தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்களை உயிர்பலி வாங்கிய துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறேன். இதற்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் தொடரட்டும். அதனை சந்திக்க தயாராக உள்ளேன். 

இவ்வாறு அவர் பேசினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

Tags:    

Similar News