செய்திகள்

திண்டுக்கல்லில் ரசாயன கலவை கொண்ட பதனீர் விற்பனை

Published On 2018-09-07 10:14 GMT   |   Update On 2018-09-07 10:14 GMT
திண்டுக்கல்லில் ரசாயன கலவை கொண்ட பதனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் கோடை வெயிலுக்கு பிறகு தற்போதும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பகலில் மக்கள் வெளியே நடமாட தயக்கம் அடைந்து வருகின்றனர்.

வெப்பத்தை தணிக்க குளிர்பானங்கள் மற்றும் இயற்கை பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். இயற்கை பானங்களில் முக்கியமானதாக உள்ள பதனீர் அதிக அளவில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த பதனீர் ரசாயன கலவை கொண்ட தன்மை உள்ளது என தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. அந்த மரங்களில் இருந்தும் எப்போதும் பதனீர் கிடைப்பது என்பது சாத்தியமில்லாதது. இதனால் வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கள் இறக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஆனால் தற்போது பதனீர் சீசன் முடிந்த நிலையிலும் டீ வியாபாரம் போல 24 மணி நேரமும் பதனீர் விற்கப்படுகிறது. இயற்கை பானம் என்பதால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி குடித்து செல்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கூட உடல் உஷ்னத்தை தவிர்க்க இதுபோன்ற இயற்கை பானத்தை குடிக்கின்றனர். திண்டுக்கல்லில் பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் சுகாதாரமற்ற ரசாயன கலவை கொண்ட பதனீர் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இந்த பதனீர் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News