செய்திகள்

மதிப்பெண் முறைகேடு - பேராசிரியர்களிடம் 600 கேள்வி கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணை

Published On 2018-09-02 10:28 GMT   |   Update On 2018-09-02 10:28 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். #AnnaUniversity
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் போட்டும், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்தும் முறைகேடு நடந்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா, பேராசிரியர்கள் ஆர்.சிவகுமார், பி.விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் இருவருமே திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றினர்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கான மண்டல அதிகாரியாக சிவகுமாரும், ஒருங்கிணைப்பாளராக விஜயகுமாரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள்தான் மதிப்பெண் மறுகூட்டலுக்கான தேர்வர்களை நியமித்துள்ளனர். தங்களிடம் மறுகூட்டலுக்கு வரும் விண்ணப்பங்களை தேர்வர்களுக்கு அனுப்பி அதிக மதிப்பெண் போடச் செய்துள்ளனர்.

தற்போது இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த வகையில் எப்படியெல்லாம் முறைகேடு நடந்தது என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். இந்த கேள்விகளை வைத்து நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக 2 பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அடுத்தக்கட்டமாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த உமாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

2 பேராசிரியர்களும் விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கும் தகவலை வைத்து அதிகாரி உமாவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களது பதில்களை ஒப்பிட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News