செய்திகள்
4-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளதை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணை 4-வது முறையாக நிரம்பியது

Published On 2018-09-01 04:55 GMT   |   Update On 2018-09-01 04:55 GMT
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை நீர்மட்டம் 120.04 அடியாக உயர்ந்து 4-வது முறையாக நிரம்பியது. #MetturDam
மேட்டூர்:

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 2லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வறண்டு கிடந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி இந்தாண்டு முதல்முறையாக நிரம்பியது.

பின்னர் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் சரிந்தது.

மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி 2-வது முறையாகவும், 21-ந் தேதி 3-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை நீர்மட்டம் 120.04 அடியாக உயர்ந்து 4-வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று 17ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.

இன்று காலை இது மேலும் அதிகரித்து 21ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.11 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று 17ஆயிரத்து 800கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று காலை இது 19ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 4முறை மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று காலை 18ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்றிரவு 22ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை இதுமேலும் உயர்ந்து 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 55-வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். #MetturDam

Tags:    

Similar News