செய்திகள்

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க 5 இடங்கள் தேர்வு- கலெக்டர் கருத்து கேட்பு

Published On 2018-08-24 13:25 GMT   |   Update On 2018-08-24 13:25 GMT
திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கலெக்டர் கருத்துகளை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தியாகி அண்ணாமலை பிள்ளை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் 13.76 ஏக்கர் நிலம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் 9.38 ஏக்கர் நிலம், ரெயில் நிலையம் அருகில் 8.32 ஏக்கர் நிலம், துரிஞ்சாபுரத்தில் 13.39 ஏக்கர் நிலம், கண்ணதம்பூண்டி கிராமத்தில் 26.36 ஏக்கர் நிலம் ஆகிய 5 இடங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த 5 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, தங்கும் வசதி, இணைப்பு சாலைகள், உள்ளூர், வெளியூர் பயணிகள் எந்த நேரமும் வருவதற்கான சூழ்நிலை, மோட்டார் சைக்கிள் வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வந்து செல்வதற்கான வசதிகள், பிற்காலத்தில் எந்தவித இடர்பாடுகள் ஏற்படாத வகையிலான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் தற்போதுள்ள மத்திய பஸ் நிலையத்தில் 50 பஸ்கள் நிறுத்த வசதிகள் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நிலவரப்படி பஸ் நிலையத்திற்கு தினமும் 585 பஸ்கள், 1,780 நடைகள் இயக்கப்பட்டது. தற்போது தினமும் 670 பஸ்கள், 1,913 நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் 12 சதவீதம் பஸ்கள், 8 சதவீதம் நடைகள் அதிகரித்து உள்ளது. புதிய பஸ் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 இடங்களிலும் 150 பஸ்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 23 ஆண்டு களுக்கு போதுமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் இந்த 5 இடங்களில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News