செய்திகள்

கும்பகோணம் பகுதியில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

Published On 2018-08-22 12:07 GMT   |   Update On 2018-08-22 12:07 GMT
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.
கும்பகோணம்:

தமிழக பாரம்பரிய மரமான பனை மரத்தினை அழிவில் இருந்து மீட்டெடுக்கவும், காவிரி டெல்டாவை வனம் மிகுந்த பகுதியாக மாற்றவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பனை மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கும்பகோணம் கோட்டத்தில் 20 இடங்களில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனை விதை விதைக்கும் தொடக்க விழா கும்பகோணம் அருகே சாக்கோட்டை பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

விழாவில் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்க திட்டமிட்டுள்ளது. சாக்கோட்டை செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இந்த விழா தொடங்குகிறது. சாலையில் இருபுறமும் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.

மேலும் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள குளம், ஏரி, அகலப்படுத்தப்பட்ட சாலை என 20 இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக தற்போது 2 ஆயிரம் விதைகள் விதைக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குள் மீதமுள்ள இலக்கை எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News