செய்திகள்

பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடி உயர்த்தும் வரை போராடுவோம் - விவசாயிகள் அறிவிப்பு

Published On 2018-08-19 04:32 GMT   |   Update On 2018-08-19 04:32 GMT
பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடி உயர்த்தும் வரை போராடுவோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். #Keralasouthwestmonsoon #Periyardam

கம்பம்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க விடமாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

இது குறித்து அங்குள்ள விவசாயிகள் கூறுகையில், கூடலூர் பாண்டியன்:- முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மூவர் மற்றும் ஐவர் குழுவினர் அணை பலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைப்பதால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும். தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்யும் ஆவணங்களை பென்னி குவிக் பேத்தி டயானா ஜிப் மாவட்ட கலெக்டரிடம் அளித்துச் சென்றுள்ளார். தற்போது நீர் மட்டத்தை குறைக்க தொடரப்பட்டுள்ள வழக்கு விளம்பரத்துக்காகவே என்று தோன்றுகிறது.


பொன் காட்சி கண்ணன்:- தமிழகம் மற்றும் கேரள மக்களிடையே தற்போது நல்லுறவு பேணிக் காக்கப்பட்டு வருகிறது. இதை சீர் குலைக்கும் வகையில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அணையின் நீர் மட்டம் 152 அடி உயரும் வரை போராடுவோம்.

ராஜா:- முல்லைப் பெரியாறு அணையில் 1924-ம் ஆண்டே 152 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு அதிக பட்சமாக 3 ஆயிரம் கன அடி நீரே திறக்க முடியும். எனவே தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயி நிலங்கள் பயன்பெறும்.


பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து ரிசார்டுகள் மற்றும் ஓட்டல்கள் கட்டியுள்ளனர். தற்போது அவற்றுக்கு பாதிப்பு என்பதாலேயே நீர் மட்டத்தை குறைக்க அழுத்தம் தரப்படுகிறது. எனவே தமிழக அரசு நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. 152 அடி வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயபால்:- கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை விவசாய நிலத்துக்கு பயன்படுத்த பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குவிக் பெரியாறு அணையை கட்டினார். ஆனால் கேரள அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக பொதுமக்களை திசை திருப்புகின்றனர்.

இதனாலேயே அணை பலம் இழந்து விட்டது போன்று வதந்தி பரப்பி வருகின்றனர். ஐவர் மற்றும் மூவர் குழுவினர் அணையின் பலத்தை உறுதிபடுத்தயுள்ளனர். எனவே பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கினால் தமிழக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். நீர்மட்டத்தை குறைத்தால் போராட்டம் நடத்தப்படும்.

Tags:    

Similar News