செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 241 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு இன்று மீண்டும் கவுன்சிலிங்

Published On 2018-08-11 09:21 GMT   |   Update On 2018-08-11 09:21 GMT
2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன. #TNMedicalCounselling #MBBS #MedicalEducation

சென்னை:

அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.

இதில் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைப்பெற்றது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு கூட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கிடைத்தது.

இந்த நிலையில் 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு சரண்டர் இடங்கள் 98, அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்று சேராத இடங்கள் 30, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 113 என மொத்தம் 241 எம்.பி.பி.எஸ்.இடங்கள் நிரப்பபடுகிறது.

இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

இரண்டாவது கட்ட கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதனால் 3500 மாணவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் கல்லூரிகளை மாற்ற விரும்பினால் இந்த வாய்ப்பின் மூலம் மறு ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ரேங்க் பட்டியலில் காத்திருப்போருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறும். ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர ஒதுக்கீடு பெற்றவர்கள் மறு ஒதுக்கீடு பெறலாம். இது தவிர சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 27 இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 3-வது கட்ட கலந்தாய்வு தனியார் பல் மருத்துவ இடங்களுக்கு பின்னர் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News