செய்திகள்

டி.வி.எஸ். தலைவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

Published On 2018-08-10 08:09 GMT   |   Update On 2018-08-10 08:09 GMT
விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழவைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். #Vaiko #TVSChairman #IdolMissingCase
சென்னை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.



இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார் என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.

தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசன் பெயரைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசனை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  #Vaiko #TVSChairman #IdolMissingCase
Tags:    

Similar News