செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிவடையும் - தொல்லியல் துறை இயக்குனர் தகவல்

Published On 2018-08-03 10:15 GMT   |   Update On 2018-08-03 10:15 GMT
தஞ்சை பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என்று தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்:

உலகப் புகழ் பெற்ற கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூடிய 1033-வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் மீட்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமா தேவி ஐம்பொன் சிலைகளுக்கு தென்னிந்திய தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே முன்னிலை வகித்தார். சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தலைவர் உதயசங்கர், பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை சிவபாதசேகரன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், தமிழ் எழுச்சி பேரவை செயலாளர் இறையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு ராஜராஜ சோழனின் பெருமைகளை விளக்கி பேசினர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் தரைதளம் அமைக்கும் பணிகளை தென்னிந்திய தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பழமை மாறாமல் தரை தளத்தில் செங்கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் பழமை மாறாமல் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இக்கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் படிந்துள்ள பாசிகள் வேதிப் பொருட்களை கொண்டு தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் சிற்பங்கள் பாதிக்கப்பட மாட்டாது.

தரை தளத்தில் உள்ள செங்கற்கள் சிதல மடைந்துள்ளதால் மழைநீர் புகுந்து அஸ்திவாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பழமை மாறாமல் அதனை 2 அடுக்காக மாற்றிய மைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் முழுமை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilNews

Tags:    

Similar News